கேள்வி கேட்கும் சகோதரர் முஜாஹிதின் கருத்தாக குறிப்பிட்டிருப்பதை, தாரமீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள், தனது "அன்-நக்ழ்" (பக்:463) எனும் நூலில் முஜாஹித், ஹமீதுல் அஃரஜ், ஸுஃப்யான் இப்னு உயைனா வழியாக அறிவித்துள்ளார்கள்.
இந்த செய்தி பற்றி அஷ்-ஷெய்க் மன்ஸூர் அஸ்-ஸிமாரீ அவர்களின் "அன்-நக்ழ்" என்ற நூலுக்கான குறிப்புரையில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. இந்த செய்தியை அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் தனது "அஸ்-ஸுன்னா" என்ற நூலில் (ஹதீஸ் இல: 1085,1181), உபைத் இப்னு உமர், முஜாஹித் வழியாக 'முழங்காலைத் தொடும் வரை' என்ற வார்த்தைகளின்றி அறிவித்துள்ளதோடு அதனை (நம்பகத்தன்மை வாய்ந்த செய்தி) ஸஹீஹ் எனவும் குறிப்பிட்டுளார்கள்.
இச்செய்திக்கு சார்பாக, சொற்பிரயோக வேறுபாட்டோடு ஸஈத் இப்னு ஜுபைர், உபைத் இப்னு உமைர், முஜாஹித் வழியாகவும் அவர்களல்லாத வேறுவழியாகவும் இன்னும் பல அறிவிப்புக்கள் காணப்படுகின்றன.
அவர்களது கருத்துக்களுக்கான அறிவிப்பாளர் தொடர்களைப் பொறுத்தவரை அவற்றில் 'ஸஹீஹ்' தரமானவையும் உள்ளன; 'ழஈஃப்' தரமானவையும் உள்ளன. அவர்கள் அனைவரும் கண்ணியத்துக்குரிய தாபிஈன்களாவர். அவர்களின் அறிவிப்புக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டு அமையப்பெற்றிருந்தாலும் அவை, முர்ஸல் வகை ழஈபாகவே கருதப்படும். அந்தவகையில், அவர்கள் அதனை நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இச்செய்தியை பனூ இஸ்ரவேலர் (யூத, கிறிஸ்தவர்)களது நூற்களிலிருந்து பெற்றிருக்கலாம்.
பொதுவாக, 'அஹ்லுஸ்-ஸுன்னா'வினரின் விதிகளின் படி, அல்லாஹ்வுக்கான (பண்பு) 'ஸிபாத்'கள் எதுவும் ஸஹாபாக்கள் அல்லது தாபிஈன்கள் போன்றோரின் கருத்தின் பிரகாரம் உறுதிப்படுத்தும் நடைமுறை கிடையாது. மாறாக, அல்லாஹ்வின் 'ஸிபாத்'கள் அல்-குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ் ஆகியவற்றின் பிரகாரமே உறுதிப்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அல்லாஹ்வின் 'ஸிபாத்'கள் தவ்கீபிய்யா (வஹீயின் நேரடித் தகவலோடு சம்பந்தப்பட்டது) ஆகும். அவற்றில் அல்லாஹ் தனக்கிருப்பதாக அவனே உறுதிப்படுத்தியிருப்பவை அல்லது அல்லாஹ்வுக்கு இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உறுதிப்படுத்தியவை என்பவற்றைத் தவிர வேறு எதுவும் அவனுக்கிருப்பதாக உறுதிப்படுத்தப்படமாட்டாது. ஏனெனில், அல்லாஹ்வின் சொந்த விடயங்களை அவனைத் தவிர வேறு யாரும் சரியாக அறிந்திட முடியாது. அதேபோல படைப்புக்களில் நபியவர்களைத் தவிர வேறு யாரும் அவனை நன்றாக அறிந்துகொள்ள முடியாது.
அதே நேரத்தில், அஹ்லுஸ்-ஸுன்னாவினர் அல்லாஹுத்தஆலா தனக்கு 'இல்லை' என்று மறுதலித்ததையோ அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் தொடர்பாக மறுதலித்ததையோ தவிர வேறு எந்த ஒன்றையும் 'இல்லை' என்று மறுதலிக்கமாட்டார்கள்.
இதன்படி, "முழங்கால்" என்ற ஸிபத் எந்தவொரு அல்-குர்ஆன் வசனத்திலோ அல்லது ஸஹீஹான ஹதீஸிலோ உறுதிப்படுத்தப் படாமையினால் நாமும் அதனை இருப்பதாக உறுதிப்படுத்த மாட்டோம். அதே போல அதனை நாங்கள் மறுதலிக்கவும் மாட்டோம். ஏனெனில், அல்-குர்ஆன் வசனத்திலோ ஹதீஸிலோ எந்தவொரு மறுதலிப்பும் இது தொடர்பாக வரவில்லை. அல்-குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இந்த 'ஸிபத்' அல்லாஹ்வுக்கு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுமானால், ஏற்கனவே அல்-குர்ஆனிலும் அஸ்-ஸுன்னாவிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏனைய 'ஸிபாத்'களில் கொண்டுள்ள நிலைப்பாட்டையே இந்த 'ஸிபத்' இலும் எமது நிலைப்பாடாக நாம் எடுத்துக்கொள்வோம். அதன்படி அதனை உறுதிப்படுத்துவதும் ஈமான் கொள்வதும் கருத்துச்சிதைவு, வலிந்துரை, ஒப்புவமை, விபரிப்பு போன்ற எவ்வித மாற்றுவிளக்க முயற்சிகளுமின்றி இடம்பெறல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
மேலும், இமாம்களான ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா மற்றும் இப்னுல்-கய்யிம் ஆகியோரின் கிரந்தங்களில் இந்த 'ஸிபத்' உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையை எங்களால் கண்டுகொள்ள முடியவில்லை. அதே போல எமது சமகால அறிஞர்களான இப்னு பாஸ் மற்றும் உதைமீன் போன்றோரின் நூற்களிலும் இந்த 'ஸிபத்' உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையைக் காணமுடியவில்லை.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.